மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ‘Centre for Film & Electronic Media Studies’ மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை நடத்தினோம். வழக்கமாக எங்களுடைய பயிற்சிப்பட்டறைக்கு வருபவர்கள் பல்துறைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இம்முறை திரைக்கலையை பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள் மட்டும். அதுவும் தெளிவான மாணவர்கள். அதனால்,அடிப்படையைத்தாண்டி,கொஞ்சம் அட்வான்ஸ் பாடங்களைப் பார்த்தோம். மற்றும் எங்களுடைய திரைத்துறை அனுபவம் பற்றி பேசினோம். இரண்டாம் நாள் முழுவதையும் திரைப்படங்களுக்கு ஒளியமைப்பது (Lighting) எப்படி என்பதையும், நம்மிடமிருக்கும் குறைந்த கருவிகளைக் கொண்டு எப்படி லைட்டிங் செய்வது என்பதைப்பற்றியும் பார்த்தோம். மற்றொரு சுவையான அனுபவம் இது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், உபகரணங்கள் எல்லாம் தேவையான அளவிற்கு இருக்கிறது. இரண்டு படபிடிப்புத் தளங்கள், இருபதற்கும் மேற்பட்ட எடிட்டிங் கணினிகள், VFX பிரிவு, ஒலிப்பதிவுக் கூடங்கள், DI தளங்கள் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இங்கே சென்னையில் இருக்கும் தொழில்முறை ஸ்டியோக்களை விட, அதிக வசதிகளை கொண்டிருக்கிறது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. அப்பகுதி மாணவர்கள் இவ்வசதிகளை முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படிப்பிற்கான செலவும் குறைவுதான். அப்பகுதி மாணவர்கள் முயன்றால், மதுரையிலிருந்தே ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்கிவிட முடியும். அதற்கான அத்தனை வசதிகளையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது. மதுரையிலிருந்து ஒரு திரைப்படம் உருவாகும் காலம் அதிக தூரமில்லை என்று நம்பலாம்.
Centre for Film & Electronic Media Studies துறையின், துறைத்தலைவர் திரு.கர்ண மகாராஜா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அத்துறையைச்சார்ந்த திரு.ராஜவேல் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். நாங்கள் மதுரையில் இருந்த மூன்று நாட்களிலும் எங்களோடு இருந்து எங்களை நன்முறையில் கவனித்துக்கொண்ட நண்பர் திரு.ரகு காளிதாஸுக்கு அன்பும் நன்றியும்.
இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாக இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.
கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். இம்முறை புகைப்படத்துறையை தவிர்த்து, முழுக்க முழுக்க ஒளிப்பதிவுத்துறையை மட்டும் எடுத்துக்கொண்டோம். வருபவர்கள் பெரும்பாலும் ஒளிப்பதிவுத்துறை சார்ந்து ஆர்வம் மட்டுமே கொண்டவர்கள், நேரடி அனுபவம் அற்றவர்கள் என்பதனால், இத்துறை சார்ந்த ஒரு முழுமையான அறிமுகத்தை அவர்களுக்குத் தருவதே ஆதார நோக்கம். எதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது, எதுவெல்லாம் இணைந்து ஒரு படைப்பை கொடுக்கின்றன, தொழில்நுட்பமும், கலையும் இணையும் அந்த அற்புதம் எப்படி நிகழ்கிறது, அதற்கான அடிப்படை தகுதி என்ன என்பதை புரிய வைக்க முயன்றோம்.
முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.
இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை, நாற்பத்தி நான்கு பேர் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டவர்களில், வெவ்வேறு துறை சார்ந்தவர்களும் இருந்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுனர், தச்சு வேலை செய்பவர், கல்லூரி ஆசிரியர் என பலரும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். அமெரிக்காவில் கணினி வேலை செய்பவரும், பெங்களூரில் இருந்தும், இலங்கையிலிருந்தும் இந்த பயிற்சிக்காகவே சென்னை வந்து கலந்துக்கொண்டவர்களும் உண்டு. முந்தைய தலைமுறை இயக்குனர் ஒருவரும் கலந்துக்கொண்டார். முன்னர் திரைப்படம் எடுக்க முயன்று, பாதியில் நின்று போய், தன் குடும்ப பாரத்தால் இத்துறையை விட்டு விலகிச் சென்றவர். இரண்டு மகள்களுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு, இப்போது திரைப்படம் எடுக்கலாமென்று யோசிப்பவர். தற்போது திரைத்துறையை அரசாளும் டிஜிட்டல் வளர்ச்சியைப் பற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமாக கலந்துகொண்டார். இப்பயிற்சி வகுப்பு தன் திரைப்படக் கனவை நனவாக்க எல்லா நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது, மிகவும் பயனுள்ள ஒரு வகுப்பு இது என்று அவர் சொன்னபோது, இப்பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக நிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்தோம்.
முதல் நாள், புகைப்படத்துறையில் ஆரம்பித்து ஒளிப்பதிவுத்துறை வரை பரவிக்கிடக்கும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினோம். புகைப்படக்கருவி எப்படி இயங்குகிறது, அதன் அடிப்படைத் தத்துவம் என்ன? அது எப்படி ஒளிப்பதிவுத் துறைக்கு அடிப்படையாக இருக்கிறது என்று துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக் கொடுத்தோம். மேலும் தமிழ் மற்றும் இந்திய திரைத்துறையில் பயன்பாட்டிலிருக்கும் கேமராக்கள் யாவை, அவற்றிற்கிடையே இருக்கும் வித்தியாசங்கள், எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப்பற்றியும் பேசினோம்.
பின்பு, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்திலிருக்கும் சில ஆதார விதிகளையும், பல்வேறு ஒளியமைப்பு விதிகளையும் தியரி வகுப்பாக அறிமுகப்படுத்தினோம். கலந்துக்கொண்டவர்கள் மிக ஆர்வமாக பல கேள்விகளை கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது. கேள்விகளும் அதற்கான பதில்களும் என்று அன்றைய நாள் மிக சுவாரசியமாகக் கழிந்தது.
இரண்டாம் நாள், Practical வகுப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். அதன் படி.. RED EPIC Camera, Alura Zoom, Ultra Prime Lens போன்றவற்றையும், சில விளக்குகள் (Lights) மற்றும் அதற்குத் தேவையான துணை உபகரணங்களையும் வரவழைத்திருந்தோம். முதல் நாளே ஒளியமைப்பு முறைகளைப்பற்றி பேசியிருந்ததனால், இப்போது அதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது என்று செய்முறை விளக்கமாக அமைத்துக்கொண்டோம். ஒளியமைப்பு செய்யும் போது கவனிக்க வேண்டியவை, ஒளியமைப்பில் இருக்கும் சிக்கல்கள் அவற்றிற்கான தீர்வு, வெவ்வேறு ஒளியமைப்பு முறைகள் என பலவற்றை பேசினோம். செய்துப்பார்த்தோம். அவற்றை கேமராவில் பதிவு செய்து கொண்டோம்.
பின்பு, அவற்றை எப்படி படத்தொகுப்புக்கு எடுத்துச் செல்வது. படத்தொகுப்பு செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை என்ன? படத்தொகுப்பு முடிந்த பிறகு, DI -க்கு எப்படி எடுத்துச் செல்வது, அதற்கு செய்ய வேண்டியவை என்னென்ன போன்றவற்றைப்பற்றிப் பார்த்தோம். இவற்றை செயல்முறை விளக்கமாகக் காட்ட, எங்கள் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் திரு. பிரவீன் வந்திருந்தார். கேமராவிலிருந்து காட்சித்துண்டுகளை எப்படி படத்தொகுப்பு மென்பொருளுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வது என்பதைப்பற்றியும், படத்தொகுப்பு செய்யப்பட்ட இறுதி வடிவத்தை எப்படி DI மென்பொருளுக்கு அனுப்புவது என்பதைப்பற்றியும் செயல்முறை விளக்கம் கொடுத்தார்.
தொடர்ந்து ‘B2H’ என்ற DI நிறுவனத்தின் Colorist திரு. ஷ்யாம் அவர்கள், எப்படி வண்ண நிர்ணயித்தலை செய்வது என்று செய்துகாட்டினார். தமிழ், மலையாளம் என பலப்படங்களில் பணி புரிந்தவர் ஷ்யாம். அண்மையில் வெளியாகி வெற்றி நடை போட்ட ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் Colorist அவர்தான்.
இரண்டு நாட்கள். கிட்டதட்ட 20 மணி நேரம். ஒளிப்பதிவு குறித்து பலவற்றை பார்த்தோம். பேசினோம். பகிர்ந்துக்கொண்டோம்.
CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922
Name: Gnanam Subramanian
Email: usgnanam@gmail.com
Phone: +91 99200 29901
SHARE THIS PAGE!